ஏற்பது இகழ்ச்சி
இன்று அனைவராலும் மிகவும் சுவாரசியமாக விவாதிக்கப்படும் ஒரு முக்கிய விவகாரம் தமிழக முன்னணிக் கட்சிகளின் தேர்தல் அறிக்கைகள். அதிலும் குறிப்பாக தேர்தல் அறிக்கையில் உள்ள இலவசங்கள். முக்கிய அணிகள் இரண்டும் போட்டி போட்டுக் கொண்டு இலவசங்களை வாரி வழங்கி உள்ளன.
முதலில் இந்த இலவச திட்டங்களைப் பற்றி பார்ப்போம். எது இலவசம்? எதற்காக இந்த இலவசம்? மக்களின் வாக்குகளை பெற, போட்டியிடும் கட்சிகள் வழங்கும் லஞ்சம் தான் இந்த இலவசம். அதையும் சூட்சமமாக செய்கின்றன இன்றைய அரசியல் கட்சிகள். தேர்தலுக்கு முன் வாக்குகளுக்கு கையூடாக பணமோ பொருளோ தர வேண்டுமானால் அவை கள்ளப்பணமாக இருந்தாலும் அவர்களின் சொந்த பணத்திலிருந்து எடுக்கப்பட வேண்டும். ஆனால் தேர்தல் திட்டங்களில் அவை இடம் பெற்று விட்டதால் அரசுப் பணத்தை வைத்தே தங்கள் காரியத்தை நிறைவேற்றிக் கொள்ளலாம். தவிரவும் மக்களை பயமுறுத்தியே அவர்களை கோழைகளாக்கி வைத்திருக்கும் அரசியல் கட்சிகள், இங்கும் அதையே பயன் படுத்திக் கொள்கின்றன. நீங்கள் வாக்களித்து எங்களை வெற்றி பெற வைத்தால் இவ்வளவும் இலவசமாக உங்களுக்கு கிடைக்கும். இல்லையேல் நஷ்டம் உங்களுக்குத் தான் என கூறாமல் கூறுகின்றன.
இது அரசியல் கட்சிகளைப் பற்றிய பார்வை என்றால், இவற்றை நன்றாக உணர்ந்த மக்கள் பார்வை என்ன என்று பார்ப்போம். இன்று பெரும்பான்மையான மக்கள் இவற்றை எல்லாம் அறிந்திருந்தும் மௌனம் காக்கிறார்கள். எப்படியும் எந்த கட்சி வெற்றி பெற்று ஆட்சிக்கு வந்தாலும் பெரிதாக மாற்றம் ஒன்றும் வரப் போவதில்லை. எந்த பலனும் இல்லாமல் இருப்பதற்குப் பதில், இந்த இலவசங்களை ஏற்றுக் கொள்வது என்பது ஒன்றும் அவ்வளவு பெரிய தவறில்லை. நாம் வேண்டாம் என்றால் எவனோ ஒருவன் நமக்கு முட்டாள் பட்டம் கட்டி விட்டு நம் பங்கை எடுத்துக் கொள்வான். அதற்கு புத்திசாலித்தனமாக நாமே வாங்கிக் கொள்வோம். இப்படித் தான் இருக்கிறது இன்றைய சராசரிக் குடிமகனின் பார்வை.
என்ன ஆயிற்று நம் இனத்துக்கு? எங்கே தவறு? ஏற்பது இகழ்ச்சி என்ற ஏற்றமிக்க நம் பண்பு எங்கு சென்றது? பல வருடங்களாக சிறிது சிறிதாக இலவசம் என்ற பெயரில் தூக்கி எறியப்படும் பிச்சைகளால் மழுங்கடிக்கப்பட்டு விட்டோம்.
கடனில் இயங்கிக் கொண்டிருக்கும் நம் அரசாங்கம் இலவசம் என்ற பெயரில் இவ்வளவு பொருட்களையும் அரசுப் பணத்தில் வாரி இறைக்குமானால், வருங்காலத்தில் யார் இந்த கடனை அடைப்பது என யோசித்தோமா? நாம் நமது சுயநலத்திற்காக நமது வருங்கால சந்ததியினரை அயல் நாட்டிற்கு அடகு வைக்கிறோம் என சிந்திக்க ஏன் மறந்துவிட்டோம்? இதையெல்லாம் மக்களுக்கு எடுத்தியம்ப வேண்டிய ஊடகங்கள் யாவும் பிரபல கட்சிகளின் பகடைகளாகவும் பிரச்சார இயந்திரங்களாகவும் இயங்கிக் கொண்டிருக்கின்றன. திரைப்படங்களாலும் நாடகங்களாலும் நம் கண்களுக்கு திறையிட்டுகொண்டிருகின்றன.
நடை முறையில் இந்த இலவசங்களை எல்லாம் நிறைவேற்றுவதற்கு வரப்போகும் அரசுக்கு நிறைய நிதி தேவைப்படும். இதனால் ஒரு பக்கம் ஆக்க வேலைகள் முடக்கப்படும். இன்று தமிழகத்தில் முக்கியமான பிரச்சனைகளுள் ஒன்று மின்சாரம். நாம் இன்றும் ஆங்கிலேயர்கள் கட்டமைத்து கொடுத்த மின்சார உள் கட்டமைப்பைத்தான் பயன்படுத்திக் கொண்டிருக்கின்றோம். என்று நாம் இதனை மேம்படுத்தப் போகிறோம்? அரசுக் கல்லூரிகளில் பேராசிரியர்கள் பற்றாக் குறையினால் சரிவர பாடங்கள் நடத்தப் படுவதில்லை. பெரு நகரங்களுக்கு இடையில் கூட இன்றும் சரியான போக்குவரத்து வசதிகள் கிடையாது. இது போன்று ஒவ்வொரு துறையிலும் முன்னேற, மேம்படுத்தப் பட வேண்டிய விஷயங்கள் நிறைய உள்ளன. இது போன்ற ஆக்க வேலைகள் அனைத்தும் தேங்கி நிற்கும்.
மறுபக்கம், இந்த இலவச அறிக்கைகள் அனைத்தையும் நிறைவேற்ற எப்படியும் பணத்தை ஈட்ட வேண்டும். அப்பொழுது தானே மக்கள் அடுத்த தேர்தலில் இவர்களுக்கு வாக்களிப்பார்கள். இருப்பது போதாதென மேலும் பல மதுக்கடைகளை திறப்பார்கள். இன்றைய கீழ் தட்டு மக்களின் மிக முக்கிய பிரச்சினை இந்த மதுக்கடைகள். காலை முதல் மாலை வரை அவர்கள் உழைத்த உழைப்பை இரவில் உறிஞ்சிக் குடிப்பதே இந்த மதுக்கடைகளின் முக்கிய வேலை. இப்படி இருதலைக் கொள்ளியாய் நம்மை அழித்துக் கொண்டிருக்கிறார்கள்.
பெரும்பான்மையான மக்கள் இவற்றைக் குறித்து பேசும் பொழுது, இதெல்லாம் நாடே அறிந்ததுதான், சாதாரண மக்கள் என்ன செய்ய முடியும் என கேள்வி கேட்கிறார்கள். ஏன் செய்ய முடியாது? யாரும் இதற்காக கத்தியை தூக்கிக் கொண்டு சண்டைக்கு செல்ல வேண்டிய அவசியம் இல்லை. இது போன்ற அறிக்கைகளால் அரசியல் கட்சிகள் மக்களை கீழ்த்தரமாக நடத்துகின்றன, எங்களை இழிவுபடுத்தி விட்டன என மக்கள் ஒன்று சேர்ந்து குரல் கொடுக்கலாம். கீழ் மட்டத்திலிருந்து மேல் மட்டத்தில் உள்ள அதிகாரிகள் வரை உள்ளவர்களுக்கு மனுக்கள் அனுப்பலாம். இந்த மாதிரியான கேலிக்கூத்தான அறிக்கைகளை வெளியிட்டு எங்களை அவமானப் படுத்தும் கட்சிகளுக்கு கட்டாயம் வாக்களிக்க மாட்டோம் என ஊர்வலங்கள் மூலம் அமைதியாக அறிக்கைகள் விடலாம்.
எந்த ஒரு சமுதாயத்தில் மக்கள் சுயநலவாதிகளாகவும், கோழைகளாகவும் உள்ளார்களோ அந்த சமுதாயம் மிகப் பெரிய சுயநலவாதிகளாலும், தொலை நோக்கு பார்வையற்ற, குடியை கெடுக்கும் தன்னலமிக்க கோழைகளாலும் ஆளப்படும். இந்த அரசியல் கட்சிகள் இன்று தேர்தல் அறிக்கைகள் என்ற பெயரில் நம்மை இவ்வளவு தூரம் இழிவுபடுத்தியிருக்கின்றன என்றால் அதற்கு காரணம் நாமும் தான். இப்பொழுதும் விழித்துக் கொள்ளாமல் நாம் கனவுலகிலேயே மூழ்கி இருப்போமானால் நாம் முழித்துக் கொள்ளும் பொழுது நாமும் நமது சமுதாயமும் சரித்திரமாகி விடுவோம்.
Comments
சென்றடைய வேண்டிய
அருமையான கருத்து...!!